Sunday, September 7, 2014

கோவில் வகைகள் பாகம் 2


ஞாழற்கோயில்:
ஞாழல் எனும் மரத்தில் எழுந்தருளிய கடவுளுக்காக எழுப்பப் பெற்ற கோவில் ஞாழற்கோவில் எனக் கூறப்படுகிறது. ஒரு கல்வெட்டின் துணை கொண்டு திருப்பாதிப் புலியூர் கோவில் முக்காலத்தில் ஞாழற் கோவிலாக இருந்தது என அறியப்படுகின்றது. பொதுவாக இவ்வகை கோவில்கள் அடர்ந்த காடுகளில் கட்டப்பட்டதாகவும், இக்கோவில்களே பின் நாளில் ஆயிரங்கால் மண்டபம் கட்ட காரணம் எனவும் அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர். மேலும் இவை மர நிழலில் கட்டப்படும் மேடைக் கோவில் என்றும் கூறப்படுகின்றது.

கொகுடிக்கோயில்:
ஸ்ரீபோகம், ஸ்ரீ விசாலம் என சிற்ப சாஸ்திரம் கூறும் கோவில் வகையில் ஒன்றே கொகுடிக் கோவில் எனக் கூறப்படுகிறது. வட்டமான சிகரம் கர்ண கூடத்துடன் இருந்தால் அது ஸ்ரீபோகமாகும், அதே அமைப்பில் இடையில் இலை வரிசை இருந்தால் அது ஸ்ரீவிசாலம் எனவும் கூறப்படுகின்றது. மேலும் முல்லை கொடி நிறைந்த இடத்தில் கட்டப்படும் கோவில்களும், கொகுடி எனும் மரத்தால் கட்டப்படும் கோவில்களும் கொகுடிக் கோவில் வகையைச் சார்ந்தவை எனும் கருத்தும் கூறப்படுகின்றது. வெவ்வேறு விளக்கங்கள் இருந்தாலும், திருக்கருப்பறியலில் உள்ள கோவிலே கொகுடிக் கோவில் என்று அப்பர் மற்றும் சுந்தரர் பாடியுள்ளனர்.

மணிக்கோயில்:
எட்டு அல்லது ஆறு பட்டையுடைய விமானத்தை உடைய கோவிலே மணிக்கோயில் என கூறப்படுகின்றது. மேலும்ஸ்கந்தகாந்தம் எனும் வகையைச் சேர்ந்த கோவிலாக இது இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

பெருங்கோயில்:

பெருங்கோயில் மற்றும் மாடக்கோயில் இவை இரண்டும் ஒரே வகையான கோவிலையே குறிக்கிறது என அறிஞர் பெருமக்களால் கூறப்படுகின்றது. இவை குன்றுகளின் மேல் அமைக்கப்பட்டு யானை ஏறமுடியாதபடி வடிவமைக்கப்படும் எனக் கூறப்படுகின்றதுபூமி மட்டத்திலிருந்து உயரமாக கட்டப்படுவதால் இவற்றிற்கு மலைக் கோயில் எனும் பெயரும் உண்டு. ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு ஒன்பது நிலைகளைக் கொண்ட மாடி போன்ற அமைப்புடைய கோவிகள் மாடக்கோவில்கள் என சிற்ப சாஸ்திரம் கூறுகின்றது. ஆனால் பிற்காலத்தில் மூன்று, நான்கு நிலைகளையுடைய மாடக் கோவில்களும் கட்டப்பட்டன. எழுபது, செங்கலால் ஆன மாடக்கோவில்களை கோச்செங்கணான் சிவபெருமானுக்காக கட்டினான் என தேவாரப்பாடல்கள் கூறுகின்றது. இக்கோவில்கள் யானை படுத்திருப்பது போன்ற தோற்றத்தை உடையதால் தூங்கானை மாடக்கோவில் என ஒரு பெயரும் பெருங்கோவில்களுக்கு உண்டு. நன்னிலம், குடைவாயில், வைகல், தண்டலைச்செரி, பெண்ணாடகம் ஆகிய ஊர்களில் இவ்வகை மாடக்கோவில்கள் உள்ளன. தஞ்சை பெரிய கோவில் , திருவானைக் கோவில் ஆகியனவும் மாடக்கோவில் வகையைச் சார்ந்த்தாகும்.

இவை அனைத்தும் சங்க காலத்தில் இருந்த கோவில்களின் வகைகள் ஆகும். செங்கள் , சுண்ணம் , மரம் ஆகியன கொண்டு கட்டப்படாத கோவில்களிலும் மூன்று வகைகள் உள்ளன. அவை

  • குடைவரைக் கோவில்,
  • ஒற்றைக் கல் கோவில்,
  • கற்றளிகள்

குடைவரைக் கோவில்:
ஒரு மலையின் இடையில் பாறையைக் குடைந்து செய்யப்படும் கோவில் குடைவரைக் கோவிலாகும். இவ்வகை கோவில்கள் திருச்சியிலும், மகேந்திரவாடி, பல்லாவரம் மற்றும் மேலும் சில இடங்களிலும் உள்ளது.

ஒற்றைக்கல் கோவில்:
இது ஒரு பாறையினை மேலிருந்து கீழாக செதுக்கி கொண்டே வந்து கோயிலின் தோற்றத்தை உருவாக்குவது ஆகும். மாமல்லபுரத்தில் உள்ள பஞ்ச பாண்டவர் இரதங்கள் இவ்வகையைச் சேர்ந்தவையாகும்.

கற்றளிகள்:
தனி தனி கற்களைக் கொண்டு கோவிலைக் கட்டுவது கற்றளிகளாகும் இவற்றிற்கு உதாரணம் தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் போன்றனவாகும்.


அடுத்த பதிவில் கோவிலின் கட்டிடக் கலை பற்றி காண்போம்.

3 comments: